Latest Results

புதிய அரசியல் கூட்டணிகளால் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டா?

அரசியல் கூட்டுகள் மற்றும் பொது வேட்பாளர்கள் அவசியப்படுகின்றமை ஏன் என்பதையும், புதிய கூட்டணிகளால் நாட்டில் மாற்றங்கள் ஏற்படுமா என்பதையும் ஆராயும் விதத்தில் அமைக்கிறது இக்கட்டுரை.அஜித் பெரகும் ஜயசிங்க வால் எழுதப்பட்ட இக்கட்டுரை கடந்த 18 ஆம் திகதிய "ராவய" பத்திரிகையில் பிரசு ரமாகியுள்ளது.அதன் தமிழ் வடிவம் இது.

2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜே.வி.பி. மஹிந்த ராஜபக்ஷவுடன் உடன்பாடொன்றை ஏற்படுத்திக் கொண்டது. மேற்படி உடன்பாடு அலரிமாளிகையில் வைத்து பகிரங்கமாகவே கைச்சாத்திடப் பட்டதோடு, அனைத்துப் பொதுசன ஊடகங்களிலும் அந்த உடன்பாடு குறித்த விவரங்கள் வெளியாகியிருந்தன. அந்த உடன்பாட்டின் ஏழாவது விதிக்கு அமைய 2005 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பமாகும் ஆறாவது ஜனாதிபதியின் பதவிக் காலத்தின் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்படுமென்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ அந்த உடன்பாட்டில் உறுதிவழங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவால் ஜனாதிபதித் தேர்தல் செயற்பாடு தொடர்பாக முன்வைக்கப்பட்ட அவரது கருத்து நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த "மஹிந்த சிந்தனை' கொள்கை விளக்கத்தின் 84 ஆவது பக்கத்தில் கீழ்க்கண்டவாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.""மக்கள் கருத்து பிரதிநிதித்துவப்படுத்தப்படுதலும் நிலையானதொரு அரசு உருவாக்கப்படுதலும் துலாக்கோலிடப்படும் விதமாக நாடாளுமன்றத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்படுவதற்கான யோசனையை முன்வைக்கிறேன். நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் பதவி இல்லாதொழிக்கப்படுவது மற்றும் நாட்டின் ஏனைய பிரச்சினைகளுக்கும் கூடத் தீர்வுகள் வழங்கப்படுவதான புதிய அரசமைப்பொன்றை அனைவரதும் இணக்கப்பாட்டுடன் முன்வைக்கும் எதிர்பார்ப்பையும் கொண்டுள்ளேன். அதுவரையில், ஜனாதிபதியென்பவர் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறும் விதத்திலான அரசமைப்புக்கான மறுசீரமைப்புகளை முன்வைப்பேன்.''

தற்போது மீளவும் தேர்தல்களுக்கான புறச்சூழல் நாட்டில் உருவாகி வருகிறது. 2004 ஆம் ஆண்டில் நிர்வாக அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் முடிவடையவுள்ளதால் நியாயமாகவும் விதிமுறைக்கமை வாகவும் செயற்படுவதானால், இடம்பெற வேண்டியுள்ளது பொதுத் தேர்தலொன்றேயாகும். இருந்தபோதிலும், 2009 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் தனது பதவிக்காலத்தின் முதல் நான்காண்டுகளையும் நிறைவு செய்துகொள்ளும் ஜனாதிபதி தற்போது, ஜனாதிபதித் தேர்தலொன்றை நடத்தி எஞ்சியுள்ள எட்டாண்டுகளுக்குமான தனது அதிகார பலத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு முனைப்புடன் செயற்படுகிறார் என தகவலறிய முடிந்துள்ளது. தாம் ஈட்டிக் கொண்டுள்ள யுத்த வெற்றியின் ஒளிப்பிரவாகம் முற்றாக மங்கி, அடங்கி, அடிபட்டுப் போவதற்கு முன்னர் தனது பதவி நிலையைத் தக்கவைத்துக் கொள்வது போன்றே, தமக்கிருக்கும் மக்கள் செல்வாக்கின் மூலம் கரைசேர்ந்துவிடும் எதிர்பார்ப்புடன் பார்த்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களென்ற தரப்பினரிடையில் எதிர்கால அரசொன்று தொடர்பாக தமக்குக் கீழ்ப்படிவான தரப்பினரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுமே ஜனாதிபதித் தேர்தலின் நோக்காகியிருப்பதாகப் புலப்படுகிறது.

மறுபுறத்தில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற முக்கியத்துவம் பெறும் அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலுமே அதை மாற்றமுறச் செய்யும் அவசியம் வலியுறுத்தப்பட்டே வந்துள்ளது.
இன்று உருவாகியுள்ள புதிய நிலைப்பாடாவது, அந்த முறைமையை அறிமுகப்படுத்திய ஐ.தே.கட்சியும் கூட அந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிரான அணியில் கைகோத்துக்கொண்டுள்ளதாகும். அந்த வகையில் நோக்கும்போது இன்று, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்குச் சார்பாக நிற்போர் ஒருவர் தானும் இல்லையென்றாகிறது.

செய்து கொள்ளப்படும் உடன்பாடுகள் தேர்தலுக்குப்பின் செயற்படுத்தப்படுமா?

ஆனாலும் அது நடைமுறையிலேயே உள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றி விடுவதாகப் பலபல விதங்களில் சத்தியங்கள் செய்து அதிகார பலத்தைக் கைப்பற்றிக் கொண்ட சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அதற்கு மனமொப்பவில்லை. அதன் சுவையை ருசித்து அனுபவித்ததன் பின்னர், மன்னர்கள், மகாராணிகள் வரையிலும் தமது அதிகார பலத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் ஆசை மேலிட்டதேயன்றி அதைக் கைவிடும் எண்ணமோ காத்திரமோ இருந்ததில்லை ஏற்படவுமில்லை. இன்று, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரொருவரை நிறுத்துவது தொடர்பாக ஐ.தே.கட்சி முனைப்புடன் பேசி வருகிறது. அத்தோடு இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பொது வேட்பாளராக முன்நிறுத்திவிடும் முயற்சிகளையும் அது மேற்கொண்டு வருகிறது. அது தொடர்பான அவரது விருப்பு வெறுப்பு பற்றி இன்னமும் எதுவும் தெரியவராதுள்ள போதிலும், ஜே.வி.பி., ஐ.தே.கட்சி மற்றும் மங்கள சமரவீர தரப்பு என்பவை ஜனாதிபதி வேட்பாளராக்கிவிட விரும்புவதாகத் தெரிகிறது.

இவை இவ்வாறிருக்க, 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 23 ஆம் திகதியில் கனடாவின் "நெஷனல் போஸ்ட்" பத்திரிகையுடனான நேர்காணல் உரையாடலொன்றில் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகா வெளிப்படுத்தியிருந்த கருத்துகள் இங்கு நோக்கற்பாலதாகும். அதாவது, ""எனது தீர்க்கமான நம்பிக்கைக்கு அமைய, இந்த நாடு சிங்களவர்களுக்கே உரித்துடையதாகும். சிறுபான்மையினச் சமூகங்களும் வாழ்ந்தாலும் கூட, நாம் அவர்களை எம்மவர்களாகவே கருதுவோம். நூற்றுக்கு 75 வீதமான பெரும்பான்மையைக் கொண்டுள்ள நாம் அடிபணிந்து செல்லத் தயாரில்லை என்பதோடு, எமக்கு இந்த நாட்டைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை உள்ளது. நாம் பலம்மிக்கதொரு இனமாவோம். அவர்களுக்கு எம்முடன் இந்நாட்டில் வாழ முடியும். இருந்தபோதிலும் சிறுபான்மைத் தரப்பொன்றான அவர்கள் ஒவ்வாத கோரிக்கைகளை கோராதிருக்கவேண்டியுள்ளது.''

இனங்களின் பிரச்சினையைப் பொறுத்தவரையிலும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கடும் சிங்களப் பேரினவாதக் கட்சியொன்றுக்கும் அப்பால் செல்லும் நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா உண்மையிலேயே சிங்கள மேலாதிக்கவாத அரசியலின் இன்றைய தலைமைத்துவத்துக்கு கடும் சவாலொன்றாகவே அமையக்கூடும். இருந்தபோதிலும் நாட்டின் சனத்தொகையில் 24 வீதம் வரையிலான சிங்களவர்களல்லாத மக்கள் மேற்குறிப்பிட்ட கருத்து நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஒருவருக்கு எவ்விதத்திலான பிரதிபலிப்பை வெளிப்படுத்தி நிற்கக் கூடுமென்பது சிக்கலுக்குரிய தொன்றேயாகும். 2005 இல் விடுதலைப் புலிகள் அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்களின் வாக்குகள் செலுத்தப்படாத அந்த வாக்குப் பகிஷ்கரிப்புத்தடை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்குப் பங்களிப்பு வழங்கியிருந்தமை எவ்வாறானதோ சிறுபான்மைச் சமூகங்களின் பிரிதிபலிப்பும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முக்கியத்துவம் பெறக்கூடும்.

இலங்கையின் இன்றைய அரசியல் களம் பயணித்துச் செல்லும் திசையைக் கவனத்தில் கொள்ளும்போது அரச தரப்புக் கட்சியைப் போன்றே நாட்டின் பிரதான எதிர்க்கட்சியும் கூட சிறுபான்மையினச் சமூகங்களிடமிருந்து வேகமாக விலகிச் செல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தெற்கின் நிலைப்பாட்டை நோக்கும்போது, நூற்றுக்கு மூன்று வீதமான முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்கள் அங்கிருந்தாலும் கூட, தென்மாகாண சபைக்கு எந்தவொரு முஸ்லிம் மாகாணசபை உறுப்பினரும் தெரிவாகியிருக்கவில்லை. அந்த வகையில், தென்புலத்தில் முழுமையான சிங்களமய பிரதிநிதித்துவமும் நடிகை அனார்க்கலி ஆகர்ஷாவைத் தவிர வேறு எந்தவொரு மகளிர் பிரதிநிதித்துவமும் அற்ற சிங்கள ஆணாதிக்க பிரதிநிதித்துவமும் கொண்டதே தென்மாகாண சபையாகும்.

இலங்கைக்குக் கூட்டு முன்னணிகள் மற்றும் பொது வேட்பாளர்கள் எதற்காக அவசியப்படுகின்றனர் என்பது குறித்து அலசல்களை மேற்கொள்வதற்கு இது பொருத்தமானதொரு புறச்சூழலாகும். தேசிய ஒருமைப்பாடு தொடர்பாக மிகப் பெரும் தடைக்கல் என சில தரப்புகளால் அடையாளப்படுத்தப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், இலங்கையில் நிர்வாகத்துக்கு வரும் சிங்களத் தலைவர்கள் கட்டாயமாகக் கொண்டிருக்க வேண்டிய இலட்சணமாவது, இனங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் திறனாற்றலேயாகும். அது, அமையாதவிடத்து நாட்டில் யுத்தமும் இல்லாத சமாதானமுமற்ற சூன்ய நிலை மென்மேலும் நீடித்துச் செல்வதாகவே இருக்கும். அதேபோன்று, யுத்தத்தின் காரணமாக இந்நாட்டிலிருந்து ஒதுக்கி ஓரம்கட்டி வைக்கப்பட்டுள்ள ஜனநாயகவாத வாய்ப்பை விரிவுபடுத்தல் மற்றும், மனித உரிமைகள் நிலைப்பாட்டை மேம்படுத்தல், ஊழல் சீர்கேட்டுக்கு வேலி போடுதல், சர்வதேச அரசியலில் துன்மார்க்க இராச்சியம் எனக் கொள்ளப்படும் இலங்கையை அந்த நிலைப்பாட்டினின்றும் மீட்டெடுப்பதும் எதிர்கால நிர்வாகி யொருவரால் நிறைவேற்றி முடிக்கவேண்டியுள்ள கருமங்களாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதென்பது அதன் ஓர் அம்சம் மட்டுமேயாகும். சிறுபான்மை இனங்களுக்கு மற்றும் மத ரீதியிலான குல ரீதியிலான சமூகங்களுக்கும், வறுமைப்பட்டோருக்கும் விசேடமாக மகளிருக்கும் கூட நியாயமான வாய்ப்பு கிட்டும் விதத்தில் மறுசீரமைக்கப்படு வது அரசமைப்புத் திருத்தமொன்றின் தலையாய குறிக்கோளாக அமையவேண்டியுள்ளது.

இன்றைய அளவில் இந்நாட்டில் முகிழந்து வருபவை இத்தகைய குறிக்கோள்களை முன்னிலைப்படுத்திக்கொண்ட அரசியல் கூட்டுகள் அல்ல. அதாவது, ராஜபக்ஷ குடும்பம் மற்றும் அதற்கு நெருக்கமானவர்களின் "புதிய வர்த்தகக் குழாமின்" எழுச்சியின் முன்னால் வெட்டுண்டு போகும் அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும், எமக்குச் சித்து விளையாட்டுக் காட்டிய மஹிந்தவுக்கு நாமும் சித்துவிளையாட்டைக் காட்டுவோமென சங்கற்பம் கொண்டுள்ள பரம வைரிகளும், ஏதோவொரு அரசில் அதிகாரபலத்தை ருசித்துச் சுவைப்பதற்குத் தருணம் பார்த்துக் காத்திருக்கும் எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகளும், செங்கொடியைக் கரத்தில் ஏந்திக்கொண்டதன் காரணமாக வாழ்க்கையின் சுபீட்சம் அற்றுப்போனதேயென ஆதங்கப்பட்டுக்கொள்ளும் முதுமையை எட்டி நிற்கும் இடதுசாரிகளும், இனவாதத்துக்கு விரோதம் காட்டி நின்ற பாவத்தின் காரணமாகத் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பற்றுப் போனதேயென ஆதங்கமுறும் புத்திஜீவிகள், கலைஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களையும் பறியில் தூக்கிப் போட்டுக்கொள்ளும் தவளைகளைப் போன்று சேகரித்துக்கொண்டு இன்று கட்டமைந்துவரும் கூட்டுகளினால் இந்நாட்டின் பொதுமக்களுக்கு எந்தவொரு நலனும் கிட்டப்போவதில்லை


0 comments:

Post a Comment

web countervisitors by country counter
fv