Latest Results

Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

வவுனியா இடம்பெயர் முகாம்களில் 1000 ரூபாவுக்கு அடையாள அட்டை வாங்கப்படுவதாக தகவல்: ஐ.தே.க



வவுனியா இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் தங்கியுள்ள வாக்காளர்களிடம் ஆயிரம் ரூபா பணம் கொடுத்து அடையாள அட்டைகள் வாங்கப்படுவதாக அரசின்மீது ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது.
அத்துடன், தேர்தல் துஷ்பிரயோகங்களை மேற்கொள்ளவென வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு தெற்கிலிருந்து பெருந்தொகை சிங்களவர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வடக்கிலிருந்து இந்தத் தகவல் தமக்கு சற்றுமுன்னர் கிடைத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.
வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள அப்பாவித் தமிழர்களிடம் பலவந்தமாக அடையாள அட்டைகள் பறிக்கப்படுகின்றன. தெற்கிலிருந்து பெருந்தொகை சிங்களவர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தின் பலம் அதிகமாக உள்ளதால் அரசாங்கத்தின் துஷ்பிரயோக செயற்பாடுகளும் அதிகமாக இருக்கும்.
மக்கள் வாக்களிப்பதற்காக போக்குவரத்து சேவைகளை வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. எனினும் தேர்தல் தினமான நாளை எந்தவொரு அரச பஸ்ஸும் சேவையில் ஈடுபடுத்தப்படக் கூடாது என யாழ்ப்பாணத்தில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அது தவிர வடக்கு கிழக்கில் இன்னும் பகிர்ந்தளிக்கப்படாமல் ஏராளமான வாக்காளர் அட்டைகள் தபால்நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன.
அதற்குப் பதிலாக என்ன செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் இதுவரை சொல்லவில்லை. இவ்வாறான சம்பவங்களை நோக்கும்போது ஆட்சி அதிகாரம் உள்ள தனிநபரின் தேவை கருதியே அரச ஆளணிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக உறுதியாகக் கூற முடியும்" என்றார்.

ரணிலின் வீட்டைச் சோதனையிட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நீதவான் தடை


ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டைச் சோதனையிடுவதற்காகக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கோரப்பட்டிருந்த அனுமதியை கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் மறுத்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டைச் சோதனையிடுவதற்கான அனுமதியை குற்றத்தடுப்பு பிரிவினர் கடந்த சனிக்கிழமை கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் சந்தனி மீகொடவிடம் கோரியிருந்தனர்.
இவ்வனுமதியைப் பெறுவதற்காக மஜிஸ்ரேட் நீதவான் சந்தனி மீகொடவின் வீட்டுக்குக் குற்றத்தடுப்பு பிரிவினர் சென்றபோதே அவர் அனுமதி வழங்க மறுத்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டில் சட்டவிரோத சுவரொட்டிகள், துப்பாக்கிகள் உட்பட சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனையிடுவதற்கான அனுமதியைக் குற்றத்தடுப்பு பிரிவினர் கோரியிருந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டை சோதனையிட முயற்சிக்கின்றமை அரச அராஜகங்களில் மற்றுமொரு செயற்பாடாகும்.
அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி தமக்குத் தேவையானதை சாதித்துக் கொள்ள சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன குற்றஞசாட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில், பெருமளவான வடபகுதி வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கில் உள்ள பெருமளவான வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிக்கமுடியாமல் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஜனாதிபதி தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாத போதிலும், ஜனநாயகத்திற்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின்படியே இந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில், எத்தனை பேர் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டார்கள் என்பது கேள்விக்குரியதாகும் என சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வடக்கில் உள்ள 10 லட்சம் வாக்காளர்களில் 50 வீதமானோர், தம்மை வாக்காளர்களாக பதிவுசெய்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் நெடுங்காலமாக இருந்த மக்களில் பலருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லாமல் உள்ளன.

இலங்கையின் தேர்தல் ஒன்றில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டைகள் முக்கியம் என்ற அடிப்படையில், அங்கும் ஆயிரக்கணக்கானோர் தமது வாக்குகளை செலுத்தமுடியாத நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தவிர தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள், தமது வாக்குகளை செலுத்துவதிலும் தடைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான செலவீனமாக 1500 மில்லியன் ரூபாய்கள் மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் பிரதம கணக்காளர், ஈ ஏ வீரசேன தெரிவித்துள்ளார்.

இது பொதுத்தேர்தல் மற்றும் உள்ளுராட்சி தேர்தல் செலவீனங்களை காட்டிலும் குறைவு என அவர் சுட்டிக்காட்டியுள்ள அவர், பொதுத்தேர்தலைக் காட்டிலும் 300 மில்லியன் ரூபா குறைவாகவே ஜனாதிபதி தேர்தலுக்கு செலவாவதாக தெரிவித்துள்ளார்.

web countervisitors by country counter
fv