Latest Results

வவுனியா இடம்பெயர் முகாம்களில் 1000 ரூபாவுக்கு அடையாள அட்டை வாங்கப்படுவதாக தகவல்: ஐ.தே.க



வவுனியா இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் தங்கியுள்ள வாக்காளர்களிடம் ஆயிரம் ரூபா பணம் கொடுத்து அடையாள அட்டைகள் வாங்கப்படுவதாக அரசின்மீது ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது.
அத்துடன், தேர்தல் துஷ்பிரயோகங்களை மேற்கொள்ளவென வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு தெற்கிலிருந்து பெருந்தொகை சிங்களவர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வடக்கிலிருந்து இந்தத் தகவல் தமக்கு சற்றுமுன்னர் கிடைத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.
வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள அப்பாவித் தமிழர்களிடம் பலவந்தமாக அடையாள அட்டைகள் பறிக்கப்படுகின்றன. தெற்கிலிருந்து பெருந்தொகை சிங்களவர்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தின் பலம் அதிகமாக உள்ளதால் அரசாங்கத்தின் துஷ்பிரயோக செயற்பாடுகளும் அதிகமாக இருக்கும்.
மக்கள் வாக்களிப்பதற்காக போக்குவரத்து சேவைகளை வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. எனினும் தேர்தல் தினமான நாளை எந்தவொரு அரச பஸ்ஸும் சேவையில் ஈடுபடுத்தப்படக் கூடாது என யாழ்ப்பாணத்தில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அது தவிர வடக்கு கிழக்கில் இன்னும் பகிர்ந்தளிக்கப்படாமல் ஏராளமான வாக்காளர் அட்டைகள் தபால்நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன.
அதற்குப் பதிலாக என்ன செய்ய வேண்டும் என்பதை அரசாங்கம் இதுவரை சொல்லவில்லை. இவ்வாறான சம்பவங்களை நோக்கும்போது ஆட்சி அதிகாரம் உள்ள தனிநபரின் தேவை கருதியே அரச ஆளணிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக உறுதியாகக் கூற முடியும்" என்றார்.

0 comments:

Post a Comment

web countervisitors by country counter
fv